சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
ஒன்பதாம் திருமுறை
1. கோயில்
279
மன்னுக தில்லை வளர்கநம்
    பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து
    புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
    அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவியறுக்க நெறிதந்த
    பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
1
280
மிண்டு மனத்தவர் போமின்கள்
    மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி
    ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள
    வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும்என்றும் உள்ளபொருள்
    என்றே பல்லாண்டு கூறுதுமே.
2
281
நிட்டையி லாவுடல் நீத்தென்னை
    ஆண்ட நிகரிலா வண்ணங்கள்
சிட்டன் சிவனடி யாரைச்
    சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக
    ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத்
    தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
3
282
சொல்லாண் டசுரு திருப்பொருள்
    சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிறை யும்சில
    தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரன்
    மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந்
    தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
4
283
புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)
    ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட
    கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
கரந்துங் கரவாத கற்பக
    னாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்
    பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே.
5
284
சேவிக்க வந்தயன் இந்திரன்
    செங்கண்மால் எங்கும்திசை திசையென
கூவிக் கவர்ந்து நெருங்கிக்
    குழாம்குழ மாய் நின்று கூத்தாடும்
ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத்
    தனத்தினை அப்பனை ஒப்பமார்
பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்
    தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
6
285
சீரும் திருவும் பொலியச்
    சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு
    பெற்றேன் பெற்றதார் பெறுவார்உலகில்?
ஊரும் உலகும் கழற
    உளறி உமைமண வாளனுக்(கு)ஆம்
பாரும் விசும்பும் அறியும்
    பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
7
286
சேலுங் கயலும் திளைக்கும்
    கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங்
    குமென்று புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா
    நெறி தந்துவந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமு ஒத்துநின்
    றானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
8
287
பாலுக்கு பாலகன் வேண்டி
    அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள்
    செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற
    சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல்
    லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
9
288
தாதையைத் தாளற வீசிய
    சண்டிக்(கு)இவ் அண்டத்தொடும் உடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற்
    கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும்
    நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத்
    தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
10
288
குழலொலி யாழொலி கூத்தொலி
    ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று
    விம்மி மிகுதிரு ஆருரின்
மழவிடை யாற்கு வழிவழி
    யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடுங் கூடி
    எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
11
288
ஆரார் வந்தார்? அமரர்
    குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன்
    அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர்
    குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும்
    ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
12
288
எந்தை எந்தாய் சுற்றும் முற்றும்
    எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர்
    அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன்
    எனைப்புகழ் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே
    என்று பல்லாண்டு கூறுதுமே.
13
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com